அரசியல் செய்ய கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது : முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி
கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்காலத்தில் சுமுகமாக தீர்க்கப்படும்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு மகளிர் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளது. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் திமுகவுக்கு பெரும் ஆதரவை தந்துள்ளது.
அதேபோல மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களை பொதுமக்களிடம் சொல்லி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்கு சேகரித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மோடி பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகிறார். 15 லட்சம் தருகிறோம் என்று சொன்னார்கள் ஆனால் 15 பைசா கூட தரவில்லை. பத்தாண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாக சொன்னார்கள் ஆனால் இரண்டு லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களுக்கும் இரண்டிலிருந்து 3 மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகிறார்கள். மோடி ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி திமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறோம் என தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது தொடர்பான கேள்விக்கு, கச்சத்தீவு விவகாரம் என்பது சாதாரண பிரச்சனை. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நட்பு அடிப்படையில் இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டது, கச்சத்தீவு மீட்பு என்பது திமுக உறுதியாக உள்ளது. அப்போது இருந்த மத்திய அரசு, திமுகவுக்கு தெரியாமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து விட்டார்கள். அப்போதே கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை திமுக நடத்தியுள்ளது. அந்த போராட்டங்களில் பங்கெடுத்து நானும் சிறைக்கு சென்றுள்ளேன். இப்போது அரசியல் காரணங்களுக்காக கச்சத்தீவு உள்ளிட்ட சில விவகாரங்களை பாஜக கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்காலத்தில் சுமுகமாக தீர்க்கப்படும் என பதிலளித்தார்.