கருமத்தம்பட்டி நகராட்சியில் அதிகாரிகள் முறைகேடு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கருமத்தம்பட்டி நகராட்சியில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2024-06-26 10:18 GMT

துணை தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற கருமத்தம்பட்டி நகராட்சி கூட்டம்.

கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நகராட்சி 27 வார்டுகள் கொண்டதாக உள்ளது. இந்த நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த நித்யா மனோகரன் என்பவர் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர். நகராட்சி ஆணையராக இருந்து வந்த முத்துசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்ட நிலையில், மதுக்கரை நகராட்சி ஆணையர் பிச்சை மணி கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் 11 நகர் மன்ற கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பிச்சைமணி உள்ளிட்ட அதிகாரிகள் தொடர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கருமத்தம்பட்டி நகராட்சியில் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளது. பணிகள் எதுவும் முறையாக நடைபெறாததால் மக்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வருவாய் பணிகளுக்காக நகராட்சியை நாடும் பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. இந்த நிலையில் நகராட்சி கூட்டத்தில் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கான நடவடிக்கையால் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில் வாக்கு வங்கி குறைந்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளோம்.துறை ரீதியிலான அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் பிச்சைமணியிடம் கேட்டபோது, நகர்மன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சட்ட விதிகளின்படி நகர்மன்ற கூட்டத்தை கூட்ட துணை தலைவருக்கு அதிகாரம் இல்லை. இந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லத்தக்கது அல்ல என தெரிவித்தார்.

Tags:    

Similar News