கனமழை தொடர்வதால் பொழுதுபோக்கிற்காக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் : கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழை கோவை மாவட்டத்தில் சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

Update: 2024-07-18 11:00 GMT

ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். தொடர்ந்து சூலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு பண்டகசாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் பேசிய ஆட்சியர் அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும் வகுப்புகளுக்கு நேரில் சென்று மாணவிகளை சந்தித்து பேசிய ஆட்சியர், ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து உரையாடினார்.

கள ஆய்வின் இடையே ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அரசு பள்ளிகள் சி.எஸ்.ஆர் உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இணைய வசதி, உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை கோவை மாவட்டத்தில் சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டும் தொடர் கனமழை, மண்சரிவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் குளிக்க செல்வது அருகே சென்று செல்ஃபி எடுப்பது விளையாடுவது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மூலம் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News