அண்ணாமலை உடன் அதிமுகவுக்கு போட்டியில்லை : எஸ்.பி. வேலுமணி
களத்தில் இல்லாத அண்ணாமலை உடன் அதிமுகவுக்கு போட்டியில்லை என்பதால் அவர் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.;
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், நன்கு படித்துள்ள சிங்கை ராமச்சந்திரன் 15 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் திமுகவின் கூட்டணி கட்சி எம்.பியை கோவை நாடாளுமன்ற தொகுதியில் எங்கும் பார்க்க முடியவில்லை என விமர்சித்த எஸ்.பி. வேலுமணி சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பார் என்றார்.
சிங்கை ராமச்சந்திரனுக்கு நிகரான வேட்பாளர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் யாரும் கிடையாது என தெரிவித்த அவர், அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டு ஓடிப்போன நபர் திமுகவில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக விமர்சித்ததுடன், 6 சட்டமன்றத் தொகுதிகளில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளர் கூட திமுகவில் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். வெறும் 4 சதவீத ஓட்டுக்களை மட்டுமே வைத்துக் கொண்டு அண்ணாமலை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அரசியல் செய்து வருவதாகவும், களத்தில் இல்லாத அண்ணாமலை உடன் அதிமுகவுக்கு போட்டியில்லை என்பதால் அவர் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார். வெளியூரிலிருந்து வந்து போட்டியிடும் அண்ணாமலை, அதிமுக கோவைக்கு எதுவும் செய்யவில்லை என விமர்சிப்பதாகவும், ஆனால் அதிமுக கோவைக்கு என்ன செய்தது மக்களுக்குத் தெரியும் எனவும் தெரிவித்தார்.
அதிமுகவுடன் போட்டியிட முதலில் அனைத்து பூத்துகளிலும் பாஜக ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் எனவும், கோவையில் சிங்கை ராமச்சந்திரன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை உள்ளதாக கூறினார். பின்னர் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசும்போது, அதிமுகவில் மேயர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து விட்டு எதிரிகளுடன் கைகோர்த்த துரோகியை கோவை மண்ணில் வெற்றி பெற செய்ய விடக்கூடாது என அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுகவை பயன்படுத்தி 4 சட்டமன்ற தொகுதிகளில் வென்று விட்டு, அதிமுகவின் முன்னணி தலைவர்களை விமர்சித்து முதுகில் குத்திய, அண்ணாமலையையும் வெற்றி பெற விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.