தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் களம்: வானதி சீனிவாசன்
தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றது என வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
வருகிற 13-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு நாளும் பலம் அதிகரித்து செல்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி இருக்கின்றது என்ற மாயை, அதனை எல்லாமே இந்த தேர்தல் உடைத்துப் போட்டு விடும். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்தாக வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுக்கின்ற முயற்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது. தேர்தல் களம் முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாக இருக்கின்றது.
தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க வினருக்கு வியாதி உள்ளது. தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செல்வார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் நெற்றியில் விபூதி பூசுவார்கள். கேட்டால் நாங்கல்லாம் கோயிலுக்கு செல்வோம் என எந்த வித்தியாசம் இல்லை என்று சொல்வார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் பார்த்தால் உடனடியாக கோவிலுக்கு செல்வோர்களை திட்டுவார்கள்.
சாமியை தவறாக பேசுகின்றனர். இது திமுகவினரின் நாடகம். தற்பொழுது பார்த்தால் உகாதி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். மக்கள் கொண்டாடுகின்ற சித்திரை 1 க்கு அனைவரிடத்திலும் தமிழ் புத்தாண்டு என்று கேட்டால், தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறார்கள். சித்திரை 1 க்கு என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம். மாநிலத்தின் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து கூறவில்லை. அது குறித்து சட்டம் பேரவையில் கேள்வி எழுப்பியதற்கு, சிறுபான்மை இனத்தவருக்கு வாழ்த்து கூறும் நீங்கள் இந்து பண்டிகைகளுக்கும் கூறுங்கள் தப்பில்லை. ஒரு முதல்வர் மக்களின் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுவதற்கு என்ன கஷ்டம்? தேர்தல் நேரத்தில் நாடகம் என மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ஆ.ராசா முன்பு எப்படி எப்படி எல்லாம் மோசமாக பேசினார்? அதற்கு ஊடக நண்பர்களிடத்தில் வீடியோ இருக்கும். தேர்தல் நேரம் வந்தால் வேறொரு வேஷம் போட ஆரம்பிப்பார்கள். அதனால் தி.மு.கவினுடைய வேசத்தை எல்லாம் மக்கள் நிறைய முறை பார்த்து உள்ளோம். தேர்தல் அறிக்கை மத்தியில் குழு அமைத்து உள்ளது. அந்தக் கூட்டம் மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இன்றும் கூட சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு பெற முடியாமல் அந்தப் பணியில் தான் ஈடுபட்டு கொண்டு உள்ளோம். கூடிய விரைவில் தேர்தல் அறிக்கை வந்துவிடும். மக்களுக்கு பத்து ஆண்டு காலம் என்னென்ன செய்து உள்ளோம். இதைத் தாண்டி என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை தேர்தலில் அறிக்கையில் சொல்லுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.