பணம் தராத ஆத்திரம் - இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்திய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

பணம் தர மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.;

Update: 2021-07-17 16:45 GMT

சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன்

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பார்த்திபன் (57). மனைவி மற்றும் தனது 3 குழந்தைகளுடன் சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது உறவினரான அபிநயா (30) கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வரதராஜபுரம் தி.ரு.வி.க நகர் பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக வழக்கறிஞராக பணியாற்றும் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் சகோதரரை அபிநயா அணுகியுள்ளார். அப்போது முதல் பார்த்திபனுடன் அபிநயா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அபிநயாவுக்கு தேவையான உதவிகளை பார்த்திபன் செய்துவந்துள்ளார். இந்தநிலையில் அவ்வப்போது பார்த்திபன் அபிநயாவிடம் பணம் கேட்டு பெற்று வந்ததாகவும், சமீபகாலமாக பணம் கேட்டு அபிநயாவை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அபிநயா பணம் தர மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அபிநயாவின் தந்தை ஆறுமுகம் பணிபுரியும் சிங்காநல்லூர் உழவர் சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அறிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சந்தையின் மதில் சுவரை ஏறி குதித்து அவரது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி உள்ளார். இதனையடுத்து தன்னை தாக்கிவிட்டு தனது தந்தையின் வாகனத்தை தீட்டு கொளுத்தியதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த அபிநயா, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் இதுதொடர்பாக புகார் அளித்தார். புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிங்காநல்லூர் போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும், காயப்படுத்தியது, இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கும் என 6 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News