தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கோவையில் பல மையங்களில் பொதுமக்கள் போராட்டம்

கோவையில் பற்றாக்குறையால் ஊசி போடாமல் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-13 05:16 GMT

கோவை பீளமேட்டில், தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 

கோவையில் பத்து நாட்களுக்குப் பிறகு,  நேற்று தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் துவங்கியது. இன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 31 மையங்கள், ஊரகப்பகுதியில் உள்ள 30 மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட கூடிய பணிகளானது நடைபெற்று வருகிறது.

கையிருப்பில் 25 ஆயிரம் தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நேற்று இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை பல்வேறு இடங்களில் டோக்கன்கள் கிடைக்காததால் பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக வட மதுரை அரசு பள்ளி முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், டோக்கன்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறி,  அங்கிருந்த காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல பீளமேடு மாநகராட்சி பள்ளி முன்பாக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் டோக்கன் கிடைக்காததால் ஆவேசமடைந்து தடுப்பூசி மையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். டோக்கன்களை அரசியல் கட்சியினர் வாங்கி செல்வதால் பொதுமக்களுக்கு டோக்கன் கிடைப்பதில்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, காவல்துறையினர் சமரசபடுத்தினர் இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளில் நிலையிலும் டோக்கன் கிடைக்காததால் பொதுமக்கள் ஆவேசமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொது மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அதற்கு ஏற்றபடி தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News