கோவையில் திமுக போட்டியிடுவது கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அமைச்சர் முத்துசாமி
தோழமைக் கட்சி தலைவர்கள், எங்கள் தலைவர்கள் பேசிய பின் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம்”;
கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை அமைச்சர் முத்துசாமி இன்று காலை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகராட்சியில்1178 பணிகள் இன்று 100 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்படுகின்றது. இந்த பணிகள் விரைவாக முடிவடைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் அதிக அக்கறையுடன் அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றது.
சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் போது சிக்கல்கள் வருகின்றது. அதையும் தாண்டி குடிநீர் வழங்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கொடுக்குறேன் என்பதை கொடுத்துவிட்டு பேசினால் மக்கள் நம்புவார்கள். அவர் இன்னும் அதை கொடுக்கவில்லை” எனக் கூறிய அவர், வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தபடும் என்ற விவகாரத்தை சூசகமாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இங்கு வந்து குற்றச்சாட்டு சொல்வது, ஒரு பிரதமர் இப்படி பேசுவது எப்போதும் பார்த்ததில்லை. ஒரு மாநில கட்சியை, ஒரு முதல்வரை, ஒரு கட்சி தலைவரை நேரடியாக வந்து, இல்லாத குற்றச்சாட்டை சொல்வது என்பது அவ்வளவு நாகரிகமானது அல்ல. அவர் பிரதம அமைச்சராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் சொல்வதும் நல்லது அல்ல. பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு அப்படி பிரதமர் பேசக்கூடாது. மக்களுக்கு மூன்றாண்டு காலமாக பல திட்டங்களை முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும்” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்விக்கு கோவையில் திமுக போட்டியிடுமா என்று கேட்கிறீர்கள் என தெரிவித்த அவர், அதை நேரடியாகவே கேட்கலாமே? தோழமைக் கட்சிகளுடன், தலைமையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தோழமைக் கட்சி தலைவர்கள், எங்கள் தலைவர்கள் பேசிய பின் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம்” எனத் தெரிவித்தார்.