கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள்!
கோவையில், வழக்கமான நாட்களை விட இன்று, இறைச்சிக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்திருந்தது.
தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் உள்ள மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக்கடைகளில் வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று, வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், புளியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனையகங்கள் மற்றும் மளிகை கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.
எனினும், ஒருசில இடங்கள் தவிர பெரும்பாலான பகுதிகளில், வாடிக்கையாளர்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி மற்றும் மளிகைப்பொருட்களை வாங்கிச் சென்றனர்.