கோவையில் பாஜக- திமுக கூட்டணியினர் இடையே மோதல்

பாஜகவினர் திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Update: 2024-04-12 01:45 GMT

காவல் நிலையத்தில் புகாரளித்த திமுக.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். இரவு 10 மணியை தாண்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இது தொடர்பாக அங்கு இருந்த காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரை எப்படி அனுமதி அளிக்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பிய நிலையில், அங்கு இருந்த பாஜகவினர் திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் கூடியிருந்தவர்களை கலைந்து போக செய்தனர். இந்த களேபரங்களுக்கு இடையே பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த வேட்பாளர் அண்ணாமலை வாகனம் அங்கிருந்து கிளம்பி சென்றது.

இதனிடையே தங்களை தாக்கிய பா.ஜ.கவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் , செல்லப்பா ,ரங்கநாதன், சேகர், சதீஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு, மதிமுகவை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர். இதில் குணசேகரின் நெஞ்சின் மீது தாக்கியதால் அவருக்கு அரசு மருத்துவமனையில் இசிஜி எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடைய சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திமுகவினர் மீது தகவல் நடத்தப்பட்ட தகவல் அறிந்து முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்கு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்து கேட்டறிந்தனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News