போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு
பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல் ரகளை செய்த நிலையில், காவல்துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை விளாங்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் 8 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி முகாமினை நேற்று நாம் தமிழர் அமைப்பினர் முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணிகளை பார்வையிட வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன், பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்ல அறிவுறுத்தினார்.
அப்போது அவர்கள் பள்ளி வளாகத்திக்குள் செல்ல மறுத்து துணை ஆணையர் ஜெயசந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல் காவல்துறையினருடன் ரகளை செய்த நிலையில், காவல்துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.