பொள்ளாச்சி: ரேசன் அட்டை இல்லாததால் நிவாரணம் பெற முடியாமல் பழங்குடியினர் தவிப்பு
பொள்ளாச்சி அருகே, ஆனைமலைத் தொடரில் உள்ள 200 பழங்குடியினருக்கு, ரேசன் அட்டை இல்லாததால், அரசு நிவாரண உதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. நகரப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புறங்கள் மற்றும் மலைக்கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும், 14 வகையான பொருட்களும் பேருதவியாக அமைந்துள்ளன.
ஆனால் கோவை மாவட்டம் ஆனைமலைத் தொடரில் உள்ள சுமார் 200 பழங்குடிகள் ரேசன் அட்டை இல்லாததால், அந்த உதவிகளை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ள ரேசன் அட்டை இல்லாத பழங்குடிகளுக்கும் நிவாரண உதவி வழங்கவும், ரேசன் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதன்பேரில், ஆவணங்களை வழங்கும்படி, அவர்களிடம் வட்டாச்சியர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து 64 விண்ணப்பங்கள், அவ்வமைப்பு சார்பில் வட்டாச்சியரிடம் வழங்கப்பட்டது. உடனடியாக, தங்களுக்கு ரேசன் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.