மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்
பொள்ளாச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ;
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி 2 ஆண்டுகளுக்குப் பின்பு திறக்கப்பட்டது. இப்பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக முன்னறிவிப்பின்றி பள்ளிக்கு வந்த சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வாழ்த்திய அமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை கண்டு உரையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த உதயநிதி ஸ்டாலினை நேரில் பார்த்ததால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.