சூறைக்காற்றுடன் கனமழை - பொள்ளாச்சி அருகே 8 வீடுகள் சேதம்
மழைக்காலங்களில் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருவதை தவிர்க்க கான்கீரிட் தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதே நிரந்தர தீர்வாக அமையும்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி சின்னார்பதி. ஆழியார் அணை அருகேயுள்ள இந்த வனக் கிராமத்தில் 37 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சின்னார்பதி பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. சிறிது நேரத்தில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. தாக்டே புயல் சின்னார்பதி கிராமத்தை புரட்டிப் போட்டுள்ளது. சூறைக் காற்றுடன் பெய்த கனமழை மற்றும் மரங்கள் விழுந்ததால் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. அதேசமயம் பழங்குடியின மக்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறை மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அக்கிராம மக்களை தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தரவும், உதவித்தொகை வழங்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மழைக்காலங்களில் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருவதை தவிர்க்க கான்கீரிட் தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதே நிரந்தர தீர்வாக அமையும் என அவர்கள் தெரிவித்தனர்.