பொள்ளாச்சியில் 4 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.;
கடந்த ஒன்றாம் தேதி 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், புரவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கும், பனிக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமிநாசினி தெளித்து, நோய் தொற்று நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.