பொள்ளாச்சியில் 5 மாத பெண் குழந்தை கடத்திய வழக்கில் மூவர் கைது

முத்துப்பாண்டி என்பவருக்கு குழந்தையை ரூ. 90,000 விற்றது தெரியவந்தது.

Update: 2021-10-01 10:15 GMT

ராமர், முருகேசன், முத்துப்பாண்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மணிகண்டன் - சங்கீதா தம்பதியினரின் 5 மாத பெண் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளிலும் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ஆனைமலை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேசன் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் ராமர் என்ற அங்கலக்குறிச்சியை சேர்ந்த நபர், முத்துப்பாண்டி என்பவருக்கு குழந்தையை ரூபாய் 90,000 விற்றதாகவும், முத்துப்பாண்டி திருமணமாகி 23 வருடம் குழந்தை இல்லாததால் ராமரிடம் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராமர், முருகேசன் இருவரும் சேர்ந்து குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. ஆனைமலை போலீசார் ராமர், முருகேசன், முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் கைது செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை கடத்தல் வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News