கிராம உதவியாளர் வீடியோ விவகாரம்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்
வன்கொடுமை வழக்கை தவறாக பயன்படுத்திய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி, கிராம உதவியாளராக முத்துசாமி ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 6-ம் தேதி இந்த அலுவலகத்துக்கு ஆவணங்களை சரிபார்க்க வந்த, கோபிராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமிக்கும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்த கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியதோடு கீழே தள்ளினார். பின்னர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த உதவியாளர் முத்துசாமி, நடக்கும் சம்பவங்களை சிலர் வீடியோ எடுப்பதை பார்த்து, உதவியாளர் முத்துசாமி, தன்னை விவசாயி கோபால்சாமி சாதி சொல்லி மிரட்டுவதாக கூறி காலில் விழுந்து நாடகமாடினார்.
இந்நிலையில் விவசாயி கோபால்சாமி காலில், கிராம உதவியாளர் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, கோபால்சாமி மீது கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரிலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், உதவியாளர் முத்துசாமி, தன்னை சாதி பெயரை கூறி திட்டியதாக அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விவசாயி அளித்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் முத்துச்சாமி கோபால்சாமியை ஆபாசமாக திட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியது. இதனை அடுத்து உண்மைக்கு புறம்பாக, தகவல் அளித்ததாக கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட முத்துச்சாமி மீது பொய்வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதில் தமிழக விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும், சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட முத்துச்சாமி மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் வீடியோ எடுத்த நபர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் குறித்து ஒரு தலைபட்சமாக விசாரணை நடைபெற்று கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொரு வீடியோ வெளியான நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை தற்கால பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மேலும் இருவரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். உடனடியாக கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறாவிட்டால் நாளை மறுதினம் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.