கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்பு
பெள்ளாதி கிராம கிணற்றில் தண்ணீரில் காட்டுப்பன்றி தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பெள்ளாதி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சுமார் 40 ஆழம் கொண்ட தண்ணீர் கிணற்றில், ஒரு காட்டுப் பன்றி தவறி விழுந்துள்ளது. தண்ணீரில் காட்டுப்பன்றி தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுப் பன்றியை கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டு பன்றியை கிணற்றிலிருந்து மீட்டு வெளியே உயிருடன் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட நடுத்தர வயதுடைய ஆண் காட்டுப்பன்றி, நல்ல உடல் நலத்துடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது.