நீட்' தேர்வு அச்சம்-மேட்டுப்பாளையத்தில் திருமணமான புது பெண் டாக்டர் தற்கொலை

நீட்' தேர்வு அச்சத்தால் மேட்டுப்பாளையத்தில் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-05-21 12:49 GMT

டாக்டர் ராசி.(பழைய படம் )

நீட்' தேர்வு அச்சத்தால் மேட்டுப்பாளையத்தில் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ராசி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவர் மருத்துவ உயர் படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராக வசதியாக மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து படித்து வந்தார்.

இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக ராசிக்கு மனதில் பயம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராசி வீட்டின் 3-வது மாடிக்கு  படிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மதியம் சாப்பிட வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் டாக்டர்.செந்தாமரை பிற்பகல் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தார்.

அப்போது அறைக்கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கு ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ் பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

இதையடுத்து தற்கொலை செய்துகொண்ட டாக்டர் ராசியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து ராசியின் தாய் டாக்டர் செந்தாமரைகொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News