மேட்டுப்பாளையத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2023-05-20 11:12 GMT

பள்ளி வாகனங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ள வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் 

மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கு மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் (பொறுப்பு) தலைமை வகித்தார். வட்டாட்சியர் சந்திரன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் தமிழக அரசு தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் நேஷனல் பள்ளி மைதானத்தில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 56 பள்ளிகளில் இயங்கி வரும் 393 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாகனங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள் அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா, முதலுதவி பெட்டி உள்ளதா என ஆய்வு செய்தனர்.

மேலும் பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நகர் பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பள்ளி பேருந்துகளை இயக்க வேண்டும்.

மாணவர்கள் காலையில் வாகனத்தில் ஏறும் போதும் மாலையில் வாகனத்தில் இருந்து இறங்கும்போதும் சாலையை கடந்து பெற்றோரிடம் மாணவர்கள் செல்லும் வரையில் வாகன உதவியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.

Tags:    

Similar News