மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் பூண்டு விலை தொடர்ந்து உயர்வு
Mettupalayam Vegetable Market Price Today-மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் பூண்டு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
Mettupalayam Vegetable Market Price Today-மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், பூண்டு, தக்காளி, டர்னீப், கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலமுறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கர்நாடகா, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல்பிரதேசம், காஷ்மீரில் இருந்து வெள்ளைப்பூண்டும் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. அதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெள்ளைப்பூண்டு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் தற்போது வெள்ளைப்பூண்டு சீசன் இல்லை. எனவே வெளிமாநில வெள்ளைப்பூண்டு மட்டுமே தற்போது அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் தற்போது வெளிமாநில பூண்டு கிலோவுக்கு ரூ.85 முதல் அதிகபட்சமாக ரூ.145 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தபடியாக இருப்பு வைக்கப்பட்ட ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் வெள்ளைப்பூண்டு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வெள்ளைப் பூண்டு மண்டி உரிமையாளர் ஜோசப் பேபி கூறுகையில், கடந்த ஆண்டு வெள்ளைப் பூண்டிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.50 வரை மட்டுமே விற்பனை ஆனது.எனவே விவசாயிகளில் 50 சதவீதம் பேர் வெள்ளைப் பூண்டு பயிரிடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தற்போது வரத்து குறைவாக உள்ளது. எனவே, ஊட்டி வெள்ளைப் பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.85 முதல் ரூ.145 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2