கள்ள ஓட்டு போட்ட மூதாட்டி: போலீஸ் விசாரணை

தேர்தல் முகவர்களிடமிருந்து புகாரை வாங்கிய அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-10-09 15:15 GMT

மூதாட்டி ஜெயமணி.

கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3 ல் மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லிக்காரன்பாளையம், ஒட்டர்பாளையம், நல்லி செட்டிபாளையம், கரியாம்பாளையம், பொகளூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கரியாம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இன்று நடைபெற்ற தேர்தலின் போது, மாலை 5.30 மணி அளவில் ஜெயமணி என்ற 85 வயது மூதாட்டி வாக்குச் சாவடிக்குள் வந்துள்ளார். அவர் தனது வாக்கை செலுத்தி விட்டு வரும்போது அங்கிருந்த அதிமுக முகவர்கள் ஜெயமணி, பொன்னம்மாள் என்ற பெயரில் கள்ள வாக்கை செலுத்தியதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அதிமுகவினரை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது திமுக நிர்வாகிகள் அங்கு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முருகேசன் என்பவர் மூதாட்டி ஜெயமணி அழைத்து வந்ததும், அவர் பொன்னம்மாள் என்பவருடைய வாக்கை செலுத்தியதும் தெரியவந்தது. மேலும் ஜெயமணி தனது மகன் வீட்டில் வசித்து வருவதும் அவருக்கு அங்கு வாக்குரிமை இல்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் முகவர்களிடமிருந்து புகாரை வாங்கிய அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News