மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் வலம் வரும் பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளை கூட்டாக சேர்த்து கிராமத்துக்கு வரும் பாகுபலி யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்;

Update: 2023-05-18 10:41 GMT

கிராமத்திற்குள்  வந்த பாகுபலி யானை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

காட்டை விட்டு வெளியேறும் யானைகள் மக்கள் வசிக்கும் பகுதி வழியே அடிக்கடி கடந்து சென்றபடி உள்ளதால் ஆற்றங்கரையோரம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன் கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது.

இன்று காலை முதலில் பாகுபாலி யானையும், அந்த யானையை தொடர்ந்து மற்ற 3 யானைகளும் வந்தன. அந்த யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது. பின்னர் அங்கிருந்த விவசாய தோட்டத்தை யானை கடந்து சென்ற போது அங்கிருந்த நாயொன்று அதனை பார்த்து குரைத்தபடி இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகுபலி நாயை நோக்கி திரும்பி நின்று அதனை முறைத்தபடி எச்சரித்து விட்டு பவானி கரையோர பகுதிக்கு கடந்து சென்றது.

அந்த சமயம் பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொண்டனர். இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News