மேட்டுப்பாளையம் நகராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் மோதல்

தி.மு.க வார்டு உறுப்பினர் நாற்காலியை எடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வீசினார். மேலும் அங்கிருந்த மைக்கை உடைத்து தாக்க முயற்சித்தார்;

Update: 2023-10-31 08:53 GMT

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் 

மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவாதங்கள் தொடங்கியபோது அதிமுகவை சேர்ந்த சுனில் குமார், தனசேகர், சலீம் ஆகியோர் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தூய்மை பணி சரிவர மேற்கொள்வது கிடையாது.

இதுதொடர்பாக சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க கண்டுகொள்வது இல்லை. சுகாதார அதிகாரிகளிடம் பேசினால் அவர்கள் முறையாக பதில் அளிப்பது இல்லை.

மேலும் அதிகாரிகள் இல்லாமல் நகராட்சி கூட்டம் நடத்த கூடாது. அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் அவர்களது வார்டு பணிகளை கூறினால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணியை புறக்கணிக்கின்றனர். நகர பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளுவது கிடையாது என்று கூறினர்

அதற்கு நகராட்சி தலைவர் கூறுகையில், நகராட்சி பொறியாளர், ஆணையாளர் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் மேல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர் என தெரிவித்தார்.

அப்போது தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு ஆகியோரிடம் அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தலைவர் மெஹரீபா பர்வீன் அமர்ந்திருந்த நாற்காலி அருகே சென்று குப்பை எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த தி.மு.க வார்டு உறுப்பினர்கள் ரவிக்குமார், ஸ்ரீராம் ஆகியோர் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கு நின்ற தி.மு.க வார்டு உறுப்பினர் ரவிக்குமார் ஆத்திரமடைந்து கூட்டரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வீசினார். மேலும் அங்கிருந்த மைக்கை உடைத்து தாக்க முயற்சி செய்தார்.

இதையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. அப்போது அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகராட்சி கூட்டத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி கூட்டஅரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நகராட்சித் தலைவர் மெஹரீபாபர்வீன் கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால் அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிமுக வார்டு உறுப்பினர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News