பாஜக தேசிய தலைவர் நட்டா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கநாளை கோவை வருகை..
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா நாளை கோவை வருகிறார். மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் டிசம்பர் 27 ஆம் தேதி மாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நான்கு ரோடு பகுதியில் நடைபெறுகிறது.
கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 12 சட்டமன்ற சபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா பங்கேற்று பேசுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு எடுத்துக் கூற வேண்டும், தேர்தல் பிரச்சாரத்தின் போது எந்தவிதமான கருத்துக்களை பேச வேண்டும், எந்த கருத்தை முன்னெடுத்து பேச வேண்டும் என்பது குறித்து அவர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவுடன், மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அதே பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த பொதுக் கூட்டத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நட்டா கலந்து கொண்டு பேசுகிறார்,
பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், மேட்டுப்பாளையம் பகுதியிலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.