நிரம்பும் பில்லூர் அணை - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது; ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-17 11:15 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் தேக்கப்பகுதிகள், கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு, இந்த அணை கட்டப்பட்டது. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும்.

நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 3160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது அணையின் நீர்மட்ட உயரம் 86.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்த மழையால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்கத் தொடங்கியது;  அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது. 

பில்லூர் அணைக்கு,  தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால்,  இன்று அதிகாலை மூன்று மணிக்கு அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரப் பகுதி மக்களுக்கு, கோவை  மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News