பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன, விவசாயிகள் கவலையடைந்தனர்.

Update: 2021-07-28 03:30 GMT

நீரில் மூழ்கிய வாழைகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 22 ம் தேதி நள்ளிரவு நிரம்பியது.

அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் நீர்வரத்தான வினாடிக்கு பதினாறாயிரம் முதல் இருபதினான்காயிரம் கன அடி வரையிலான தண்ணீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டது.

இதனால் பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, பவானி நீரை ஆதாரமாக கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர துவங்கியது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்த காரணத்தால் அணையின் நீர்தேக்க பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் தாலுக்கா, சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட மலையடிவார கிராமங்களான லிங்காபுரம், காந்தவயல், உளியூர், ஆளூர், காந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இக்கிராமங்களை நகர பகுதியோடு இணைக்கும் சாலை மற்றும் இருபதடி உயர உயர்மட்ட பாலமும் நீருக்கடியில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இக்கிராமங்கள் தனி தீவுகளாக மாறின.

மேலும் இப்பகுதியில் விவசாயிகளால் பயிரடப்பட்டிருந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களும் தோட்டங்களின் மின் மோட்டார்களும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

ஓராண்டு பயிரான வாழை மரங்கள் இன்னும் நான்கைந்து வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கியதால், அதன் வேர் பகுதி அழுகி வீணாகி விட்டது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News