வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி மாறி வருவதை கண்டு மக்கள் வியந்து வருகின்றனர்.

Update: 2024-02-28 12:49 GMT

ஏரியில் உள்ள வெளிநாட்டு பறவையான தாழைக்கோழி

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை அடுத்து அக்ரஹார சாமக்குளம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரியினை கௌசிகா நீர் கரங்கள் அமைப்பு மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கடந்த சில வருடங்களாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த தொடர் கனமழையின் காரணமாக இந்த 165 ஏக்கர் பரப்பளவுள்ள அக்ரஹார சாமக்குளம் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தது. இதனால் அக்ரஹார சாமக்குளம், கோவில் பாளையம், கீரணத்தம், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 165 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி குழுவினர் இக்குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தாழைக்கோழி எனப்படும் அரிய வகை வெளிநாட்டு பறவைகள், இந்த ஏரியில் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன. இதனால் கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் நாள்தோறும் இந்த அக்ரஹார சாமக்குளத்தினை பார்வையிட்டு ஏரியின் அழகை கண்டு ரசிப்பதோடு, வெளிநாட்டு பறவையினங்களையும் கண்டு வியந்து வருகின்றனர்.

Tags:    

Similar News