அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ஆரி அர்ஜுன்
அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ஆரி அர்ஜுன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.;
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் ரத்தினம் கல்லூரியின் புதிய கல்லூரி வளாகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அந்த கல்லூரி புதிய வளாகத்தினை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை ஆர்வத்துடன் நடிகர் ஆரி அர்ஜூன் கண்டு ரசித்தார்.
பின்னர் நடிகர் ஆரி அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். நடிகர் எப்படி அரசியலில் வருகிறோம் என்பது முக்கியமல்ல எனவும், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் எனவும் தெரிவித்தார். ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்காக முயற்சிக்கும் நடிகர் விஜய்க்கும், அவரது கொள்கைகளுக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறிய அவர், கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள்கள் உள்ளிட்டவற்றிற்கு அடிமையாகக்கூடாது கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு அடிமையாகும் சக நண்பர்களை நண்பர்களை கண்டிக்க வேண்டும் எனவும், பெற்றோர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட நண்பர்களுக்கு தெரிய வரும் எனவும் கூறிய அவர், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தவறான வழியில் சென்றால் முதலில் சக மாணவர்களுக்கே தெரியும் என்பதால் நண்பர்களே அதனை தடுக்க முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சிலர் நடிகர் ஆரி அர்ஜூன் உடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.