வாளையார் அணையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.;
உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(16). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சக நண்பர்களான குறிச்சி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரோ, சுந்தராபுரம் பகுதியை சேர்ந்ந பூர்ணிஸ், ராகுல், பிரணேஷ் ஆகியோருடன் தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதிக்கு சென்றுள்ளார். 5 பேரும் இன்று மதியம் இரண்டு இரு சக்கர வாகனத்தில், வாளையார் அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அணையில் குளித்துக் கொண்டிருந்த போது, சஞ்சய், ஆண்ட்ரோ, பூர்ணிஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மூவரும் திரும்பி வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அவரது நண்பர்கள் வாளையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இது குறித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வாளையார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.