நடிகர் விவேக்கிற்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி
நடிகர் விவேக் வயதை நினைவு கூறும் விதமாக, கோவை மாவட்ட நடிகர் சங்கம் 59 மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.;
பிரபல நகைச்சுவை நடிகரும், இயற்கை ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். பல்வேறு தரப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக அதன் தலைவர் சாகுல் தலைமையில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குட்டிப்புலி பிரபல நடிகர் ராஜசிம்மன், நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு, விஜய் மக்கள் இயக்க மாணவரணி தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடைய அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சின்னக்கலைவாணர் நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடும் பணியை அனைத்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தொடரும் வகையில், அவரது வயதை நினைவு கூறும் விதமாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.