தியாகிகளின் படங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

விடுதலை போராட்ட தியாகிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன அணிவகுப்பு நடத்த திட்டமிட்டனர்.;

Update: 2022-01-26 07:00 GMT

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தடுத்து நிறுத்திய போலீசார்.

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், விடுதலை போராட்ட தியாகிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன அணிவகுப்பு நடத்த திட்டமிட்டனர். கொரோனா தொற்று பரவலை காரணமாக காட்டி, விடுதலை போராட்ட தியாகிகளின் படங்களை வைத்தபடி வாகன அணிவகுப்பு நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் காவல் துறையினர் தடையை மீறி சுந்தராபுரம் பகுதியில் ஈஸ்வரன் தலைமையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஒன்று திரண்டனர். அப்போது வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட விடுதலை போராட்ட தியாகிகளை படங்களை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கதை சேர்ந்த சுமார் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், "டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட தியாகிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த வாகன அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்தோம். தமிழ்நாடு அரசின் கொள்கையின் படி தான் இந்த அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் விடுதலை போராட்ட தியாகிகளின் படங்களை தள்ளிவிட்டும், தூக்கி எறிந்தும் காவல் துறையினர் அராஜமாக நடத்து கொண்டனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். குடியரசு தினத்தில் விடுதலை போராளிகளின் படங்களை எடுத்துச் செல்ல தடை விதித்தை ஏற்றுக் கொள்ள முடியாது" என அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News