கோவையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்
கோவை ஜல்லிக்கட்டில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில், ஐந்தாவது ஆண்டாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள், இன்று காலை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து, இப்போட்டிகளை நடத்துகின்றன.
இப்போட்டிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாடிபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதனிடயே கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்ற்தழ் மற்றும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே போட்டிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டன.
மேலும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி இணையதளங்கள் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், வீடுகளில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒட்டி, அப்பகுதியில் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.