கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு
கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும் காவி நிற பொடி தூவியும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது.;
அவமரியாதை செய்யப்பட்ட பெரியார் சிலை.
கோவை வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் நடத்தி வருகின்றனர். அப்படிப்பகம் முன்பு பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டும் காவி நிற பொடி தூவியும் இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அப்படிப்பக நிர்வாகிகளுக்கு தகவல் தெரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த நிர்வாகிகள் போத்தனூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதனிடையே அங்கு திரண்டிருந்த திராவிட கழகத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இரவு நேரத்தில் அப்பகுதியில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.