கிணத்துக்கடவு அருகே தீ விபத்து!
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தீவிபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் சேதமடைந்திருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தீவிபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் சேதமடைந்திருக்கிறது.
கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ளது தாமரைக் குளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35 வயதான இவருக்கு சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இது கிணத்துக் கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது.
ராஜேஷுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு நல்லமுறையில் தொழில் நடந்துவந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மதியம் வழக்கம்போல தென்னை நார் உற்பத்தியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாரத விதமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தென்னை நார் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீப்பிடிக்கத் துவங்கியதும் முதலில் யாரும் கவனிக்காத நிலையில், தீ மள மளவென எரியத் துவங்கியதால் அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தீ வேகமாக பரவி மற்ற இயந்திரங்கள் மீதும் பற்ற பயங்கர சேதம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் லட்சக் கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.