விவசாய நிலங்களை பாதிக்கும் கல்குவாரிகளை மூடக்கோரி விவசாயிகள் போராட்டம்

300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-02 12:30 GMT

கல் குவாரியை மூடக்கோரி விவசாயிகள் போராட்டம்.

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் என்பவர், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவிந்தநாயக்கனூர் பகுதியில் கல் குவாரியை ஏலம் எடுத்துள்ளார். இங்கு கல் குவாரி அமைக்க அனுமதித்துள்ள அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய விவசாய சங்கத் தலைவர் சுந்தரம், கோவிந்த நாயக்கனூரில் திலீப் என்பவர் கல்குவாரி ஏலத்தில் எடுத்து விதிமுறைகளை மீறி இயக்கி வருவதாக குற்றம்சாட்டினார். இங்கு 300 மீட்டர்க்குள் இரண்டு கோவில்கள், நீரோடை, சுடுகாடு இருக்கின்றது எனவும், இந்த நீரோடையானது 300 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்புகள் இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்துள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழக அரசு கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News