கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டது.;
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9 ம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்துள்ளனர். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரியார் சிலைக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சி சார்பில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், இதேபோல தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.