ஏடிஎம் இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளை முயற்சி: இருவர் கைது

ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுள்ளது.

Update: 2021-11-30 05:45 GMT

கைது செய்யப்பட்ட ஷாகில் மற்றும் காலீத்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் செட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு விரைந்து சென்ற போலிசார் ஏ.டி.எம் மையத்தில், லாக்கரை திறந்து திருட முயன்ற இருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில் (18) மற்றும் காலீத் (28) என்பதும் தெரியவந்தது‌.

கோவையில் உள்ள அமேசன் நிறுவன குடோனுக்கு லாரி மூலம் லோடு இறக்கிவிட்டு, திரும்பச் சென்ற போது, செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர். இதையடுத்து ஷாகில் வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, காலீத் ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்திருந்த கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து, பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் செட்டிபாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இருவரிடமும் வேறு ஏ.டி.எம் இயந்திரத்தில் திருடி உள்ளனரா? வேறு வழக்கில் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News