கொரோனா தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - சமக தலைவர் சரத்குமார்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது -சரத்குமார்;
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது, தற்போது அரசு சட்டமன்ற கூட்டத் தொடரை சிறப்பாகவும், சீராகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். முழு செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை சொல்ல இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் தற்போதைய ஆட்சிக்கு சட்டமன்றத்தை சிறப்பாக ஒரு ஜனநாயக முறையில் நடத்தி முடித்ததுள்ளது ஒரு சான்று.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை நேரடியாக மக்களுக்கு நல்லது செய்தவர்கள் அவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் போட்டியிடலாம் என தெரிவித்து உள்ளேன். அதை ஏற்று பல்வேறு இடங்களில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எந்தெந்த பகுதிகளில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள் என்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்ணும் கருத்துமாக சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தற்போதைய அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.
பொதுமக்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதே போல மூன்றாம் அலை வராமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் யாரும் தவறு செய்யவில்லை என்றால் வருந்த வேண்டாம் தங்களது கணக்குகளை காட்டிக் கொள்ளலாம் தவறில்லை. கொடநாடு விசாரணை தொடர்பாக கேட்ட போது, எந்த ஒரு விசாரணையும் வேண்டாம் என்பதை எதிர்ப்பவன் நான், விசாரணை என்பது நாட்டின் ஜனநாயகம், முதலில் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு சென்று தன்னை நிரூபிக்கலாம். அதை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதியாக இருந்தால் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்பது எனது கருத்து, வேளாண் சட்டத்தைப் பொருத்த அளவில் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசு வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. எனவே இதை மத்திய அரசு ஆலோசனை செய்ய செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். அதே போல தனித்து இயங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியில்லை. சாதிய அமைப்புகள் இருக்கலாம் அது வெறியாக மாறக்கூடாது அப்போதுதான் சமத்துவமாக இருக்க முடியும் என தெரிவித்தார்.