சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக- முதல்வர்

Update: 2021-02-15 06:45 GMT

அதிமுக ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என கோயமுத்தூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். 123 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

திருமண விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் கோடிக்கு மேல் நிதி மத்திய அரசுக்கு செல்கின்றது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டத்தையும் திமுக பெற்று கொடுக்க வில்லை. ஒரு மெடிக்கல் கல்லூரி வாங்குவதற்கு அலைய வேண்டி இருக்கும் நிலையில் 11 மருத்துவகல்லூரிகளை அதிமுக அரசு பெற்று கொடுத்து இருக்கின்றது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பூர்வாங்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற பொது தேர்தலில் வீடு வீடாக நமது சாதனைகளை எடுத்து செல்ல வேண்டும். விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி இன்று திருமணம் செய்த மணமக்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமண மேடையே சாட்சி. திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால் தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றோம். தமிழ்நாடு தொழில் துவங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில் முனைவோர் தொழில் துவங்க ஆர்வமாக தமிழகம் வருகின்றனர். இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரமாக கோவை, சென்னை இருக்கின்றது" என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News