ஆடுகள், நாய்களை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டது

Update: 2021-01-30 07:30 GMT

கோவை மதுக்கரை பகுதியில் ஆடுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறை கூண்டில் பிடிபட்டது.

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபீஸ், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று வீட்டின் அருகில் இருக்கும் நாய்கள், ஆடுகள், கன்றுக்குட்டி ஆகியவற்றை வேட்டையாடி வந்தது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட ஆடுகளும், நாய்களும் சிறுத்தையால் வேட்டையாடப்பட்டது.

கடந்த 21 ம் தேதி நள்ளிரவில் குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமரத்து இருந்தது. மேலும் வீட்டின் காம்பவுன்ட் சுவரில் இருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை தப்பி சென்றது. இதன் பின்னர் மட்டப்பரை என்ற பகுதியில் உள்ள ஞானபிரகாஷ் என்பவரின் ஆட்டுப்பட்டிக்குள் சிறுத்தை நுழைந்தது. நான்கு ஆடுகளை சிறுத்தை கடித்த நிலையில், 3 ஆடுகள் உயிரிழந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து காந்திநகர் மற்றும் மட்டப்பரை ஆகிய இடங்களில் மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் காந்தி நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தை வனத்துறை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News