40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் : எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை
Coimbatore News- கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகள் மட்டுமல்லாமல், 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கை ராமச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உட்பட கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக. தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி. களத்தில் இருக்கும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி வேட்பாளர்கள் படித்தவர்கள். 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்து பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம்.
கோவை, நீலகிரி, திருப்பூர் மக்களவை வேட்பாளர்கள் இந்த பகுதிக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுப்பார்கள். கடந்த திமுக ஆட்சியில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு கொடுத்துள்ளோம். பல்வேறு சாலைகள், கல்லூரிகள் என ஏராளமான திட்டங்களை, வளர்ச்சியை கோவைக்கு கொடுத்துள்ளோம். மூன்றாண்டுகளாக எந்த திட்டத்தையும் திமுக இங்கே கொண்டு வரவில்லை. மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தெளிவாக இருக்கின்றனர். கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகள் மட்டுமல்லாமல், 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம். இந்த வெற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறும். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கின்றது. ஆனால் கோவை மாவட்டத்திற்கு திட்டங்கள் தந்ததெல்லாம் அண்ணா திமுக தான்.
பெட்ரோல், டீசல் விலையை பற்றி எல்லாம் திமுக பேசக்கூடாது. எந்த வாக்குறுதியும் இந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றவில்லை. அண்ணா திமுக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றும்.திமுகவின் முப்பத்தி எட்டு எம்பிக்கள் எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு வெற்றி உறுதி, சொன்னதை செய்யக்கூடிய கட்சி அண்ணா திமுக” எனத் தெரிவித்தார். கோவை மக்களவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, பதில் சொல்வதை தவிர்த்து விட்டு எஸ்.பி வேலுமணி நழுவிச் சென்றார்.