கணேசமூர்த்தி மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை : கோவையில் வைகோ உருக்கம்

Coimbatore News- கொங்கு மண்டல திராவிட இயக்க சரித்திரத்தில் அழியாத நட்சத்திரமாக கணேசமூர்த்தி இருப்பார் என்று, கோவையில் வைகோ கண்ணீரோடு கூறினார்.

Update: 2024-03-28 05:15 GMT

Coimbatore News- கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ

Coimbatore News, Coimbatore News Today- ஈரோடு மக்களவை உறுப்பினராக இருந்தவர் கணேச மூர்த்தி. மதிமுகவின் மூத்த தலைவரான அவர், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்த கணேச மூர்த்தி, கடந்த 24 ம் தேதி தென்னை மரங்களுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இன்று காலை சிகிச்சையின் போது கணேசமூர்த்திக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த கணேசமூர்த்தி உடல் ஈரோடு பெருந்துறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கணேசமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இரண்டு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கிறோம். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தார். அவர் மன அழுத்ததில் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். எம்.பி. சீட் கொடுத்த விவகாரத்தில் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்.

இந்த முடிவிற்கு வருவார் என நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கின்றது. மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது. எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. அவரது மகனையோ, மகளையோ, கட்சி நிர்வாகிளையோ கேட்டால் உண்மை என்ன என்பது தெரியும். அவர் மறைந்தார் என்ற செய்தி என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் மருந்து குடித்தார் என்ற செய்தியையே தாங்க முடியவில்லை.

அவ்வளவு மன உறுதி கொண்டவர். நெஞ்சத் துணிவு கொண்டவர், எதைப் பற்றியும் கவலைப்படாதவர். இத்தனை ஆண்டுகளாக எந்தப் பதவியிலும் இல்லை என்பதை பற்றி கவலைப்படாதவர். கொங்கு மண்டல திராவிட இயக்க சரித்திரத்தில் அழியாத நட்சத்திரமாக இருப்பார் என்பதை வேதனையோடு, மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Tags:    

Similar News