லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்
தலைமைக் காவலர் கிஷோர் வாரம் 20 ஆயிரம் ரூபாயும், ஜோதிமணி ரூபாய் 5 ஆயிரமும் பெற்று வந்துள்ளனர்.
கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயுர்வேத மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் கிஷோர் மற்றும் முதல்நிலை காவலர் ஜோதிமணி ஆகியோர் ஆயுர்வேத மையத்திற்கு சென்று வாரம் ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அந்த மையத்தின் மீது சட்ட விரோதமான செயல்கள் நடப்பதாக வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். தலைமைக் காவலர் கிஷோர் வாரம் 20 ஆயிரம் ரூபாயும், ஜோதிமணி ரூபாய் 5 ஆயிரமும் பெற்று வந்துள்ளனர்.
இது சம்மந்தமாக ஆயுர்வேத மையத்தின் உரிமையாளர் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு காவலர்களும் கையூட்டு பெற்றது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து கிஷோர் மற்றும் ஜோதிமணி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதேபோல கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் விபத்து வழக்கில் ஜாமினில் விட இலஞ்சம் வாங்கிய ஆய்வாளர் சுரேஷ், தலைமைக் காவலர் வெங்கடாசலம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரே நாளில் இலஞ்சம் வாங்கிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.