ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!

அதிகாலையில் மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்தின் அமர்ந்து பல்வேறு சாவிகளைப் போட்டு பூட்டை திறக்க முயற்சி செய்கிறார்.;

Update: 2024-05-08 14:45 GMT

இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள 7 நம்பர் பகுதியில் சிவசக்தி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உரிமையாளர் வீடு உள்ளது. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் சதீஷ் என்பவர் பெயரில் இருக்கின்ற இரண்டு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உள்ள சாலையில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, இரண்டு சக்கர வாகனம் நிறுத்திய இடத்தில் காணவில்லை. இதுகுறித்து கடை ஊழியர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினரிடம் கேட்டார். பின்னர் அவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை பார்த்த போது, அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்தின் அமர்ந்து பல்வேறு சாவிகளைப் போட்டு பூட்டை திறக்க முயற்சி செய்கிறார்.

நீண்ட நேரம் பிறகு அந்த வாகனத்தில் பூட்டை ஒரு சாவி மூலம் திறந்து அந்த வாகனத்தை சாவகாசமாக ஓட்டி செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் வாகனத்தை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஆட்கள் அதிகமாக நடமாட்டம் இருக்கும் அந்தப் பகுதியில் நின்று சாவகாசமாக இரண்டு சக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபரின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News