விடாமுயற்சி குறிக்கோளை அடைய வழிவகுக்கும் : போலீஸ் கமிசனர் பாலகிருஷ்ணன்..!
மாணவர்கள் எடுத்த முடிவில் விடாமுயற்சியுடன் குறிக்கோளை அடைவதை இலட்சியமாக கொள்ள வேண்டும்;
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் கே.பாலகிருஷ்ணன் கலந்துரையாடலில் மாணவர்களிடையே பேசியதாவது, இதைத் தான் தேர்ந்தெடுக்கின்றோம் என எண்ணி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் எனவும், மாணவர்கள் எடுத்த முடிவில் விடாமுயற்சியுடன் குறிக்கோளை அடைவதை இலட்சியமாக கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் விவசாயம், சட்டம், காவல் துறை, அரசியல் என அனைத்து துறை சார்ந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். தேர்வுகளுக்கு தயாராகும் போது சில இடர்பாடுகள் வரும் எனவும், ஆனால் அதையும் தாண்டி இலட்சியத்தை அடைய மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
கடந்த காலம் மற்றும் எதிர் காலத்தை சிந்திக்காமல் நிகழ் காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் பிரசாந்த் அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். அப்போது பாடங்களை படிப்பது ஒரு புறம் இருந்தாலும் அதனை ஸ்மார்ட்டாக கையாளுவதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.