கோவை அருகே முதியவர் கொலை - ஹோட்டல் தொழிலாளி கைது
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.;
கோவை கணுவாய் அடுத்துள்ள சோமையனூர் அம்மா நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார். 55 வயதான செந்தில்குமார், கூலி தொழிலாளி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவரும் இவரது நண்பரான சோமையனூரை சேர்ந்த 30 வயதான சின்னதுரை இருவரும் இணைந்து அவ்வப்போது மது அருத்துவது வழக்கம். சின்னதுரை அங்குள்ள ஒர் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஹோட்டலுக்கு வந்த செந்தில்குமார் ஹோட்டர் உரிமையாளர் மற்றும் சின்னதுரையிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இவர்கள் இருவரை சமாதானம் பேசி விலக்கியுட்டனர். இருந்தும் இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளனர். அதன்பின்னர் இன்று காலை சோமையனூர் பேருந்து நிறுத்தம் அருகே செந்தில்குமார் இறந்து கிடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையிலான தடாகம் போலீசார், இறந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலை நடைபெற்று இருப்பதாக பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கொலை செய்து விட்டு காளப்பநாயக்கன்பாளையம் அருகே பதுங்கி இருந்த சின்னதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.