விநாயகர் சதுர்த்தி குறித்து சர்ச்சை பேச்சு: மத போதகர் கைது
இந்து முன்னணி அமைப்பினர் டேவிட் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் அருகே கணுவாய் பகுதியில் செயின்ட் பால் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றை நடத்தி வருபவர் டேவிட். மத போதகராக உள்ள இவர் தனது லெட்டர்பேடில் கிறிஸ்தவ மெஷினரிகளில் இருக்கும் நண்பர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து இருந்தார். அதில் விநாயகர் சதுர்த்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து இருந்தார். அந்த துண்டு பிரசுரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஜெப யாத்திரைகளின் விளைவாகவே விநாயகர் சிலையை வெளியில் வைக்கக் கூடாது எனவும், சிலைகளின் அளவு குறைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில் , சதுர்த்திக்கு முன்பாகவோ, அதே தினத்திலோ ஜெப யாத்திரை நடத்த வேண்டும் எனவும் துண்டுப் பிரசுரத்தில் டேவிட் குறிப்பிட்டுள்ளார். இந்த துண்டு பிரசுரம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், நேற்று இந்து முன்னணி அமைப்பினர் டேவிட் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் டேவிட்டை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.