கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் யானை தந்தம் விற்க முயன்ற 6 பேர் கைது
டிராவல் பேக் ஒன்றில் இரண்டு தந்தங்களுடன் குடோனின் தந்தத்தை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.;
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிக்கு அருகில் தனியார் குடோன் ஒன்றில் நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையக் குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கோவை சரக பணியாளர்கள் தனிக்குழுவாக சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது சுமதி (55), ஆஸாத் அலி(45), நஞ்சப்பன் (47), சந்தோஷ் பாபு (42), கோவிந்தராஜுலு(65) ஆகிய ஐந்து பேரும் டிராவல் பேக் ஒன்றில் இரண்டு தந்தங்களுடன் குடோனின் உள்பகுதியில் அமர்ந்து தந்தத்தை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து 5 பேரையும் வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஐந்து நபர்களும் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்தது உறுதியானது. மேலும் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் இரண்டும் செந்தில் வேலன் (62) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.