இரும்பு வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
வீட்டின் தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவி இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.;
கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (44). இவர் தனது மனைவி ஐஸ்வர்யா, மகன் அட்சய கீர்த்தன், மகள் அனு ரூபா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் வெள்ளக்கிணறு பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 3 ம் தேதியன்று தனது குடும்பத்தாருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, இன்று அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவி இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் லாக்கரில் இருந்த 101 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. லாக்கரில் வெள்ளை பையில் இருந்த 30 பவுன் நகைகள் அப்படியே இருந்துள்ளது. இது தொடர்பாக தினகரன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.